பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் முருகன், கருப்பசாமிக்கு ஜாமீன் - சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் முருகன், கருப்பசாமிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

Update: 2019-02-12 22:15 GMT
புதுடெல்லி,

பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவியுடன் கைது செய்யப்பட்ட முருகன், கருப்பசாமி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையால் நிராகரிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் அவர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். நீதிபதிகள் பாலிநாரிமன், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் கடந்த டிசம்பர் 4-ந் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழக காவல்துறை 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பாலிநாரிமன், வினித்சரண் ஆகியோர் அமர்வில் நடைபெற்றது.

விசாரணை தொடங்கியதும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சஞ்சய் ஹெக்டே, இந்த இருவரும் கடந்த 9 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இனியும் அவர்களை சிறையில் அடைப்பதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை. எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் முருகன், கருப்பசாமி ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்