இறந்ததாக அறிவிக்கப்பட்ட தந்தைக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கும் போலீஸ் அதிகாரி

இறந்ததாக அறிவிக்கப்பட்ட தந்தைக்கு, போலீஸ் அதிகாரி ஒருவர் வீட்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்.

Update: 2019-02-15 21:30 GMT
போபால்,

மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் உள்ள 74 பங்களாக்கள் பகுதியில் வசித்து வருபவர், ராஜேந்திரகுமார். இவர், மாநில கூடுதல் டி.ஜி.பி.யாக. உள்ளார்.

சிறுநீரகம், நுரையீரல், இருதய கோளாறால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இவருடைய தந்தை கே.எம்.மிஸ்ரா (வயது 84) இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கடந்த மாதம் 14-ந்தேதி அறிவித்து அதற்கான இறப்பு சான்றிதழையும் வழங்கியது.

இதைத்தொடர்ந்து தான் வசிக்கும் போலீஸ் குடியிருப்பிற்கு தந்தையின் உடலை எடுத்து வந்த ராஜேந்திரகுமார் அதை எரிக்கவோ, அடக்கமோ செய்யாமல் வீட்டிலேயே வைத்துள்ளார். இதுபற்றி ஊடகங்களில் பரபரப்பு செய்தி வெளியானது.

ஆனால், தந்தை இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்ததை ஏற்க போலீஸ் அதிகாரி மறுத்தார். அவர் கூறுகையில், “எனது தந்தை இறந்து விட்டதாக கூறுவது தவறு. அவர் சுய நினைவை இழந்த நிலையில் உள்ளார். அவருக்கு நாடித் துடிப்பும் சீராக உள்ளது. அதனால்தான் அவருக்கு வீட்டிலேயே ஆயுர்வேத சிகிச்சை அளித்து வருகிறோம். இதுபோன்ற நிலையில் எத்தனையோ பேர் குணப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். மேலும் மருத்துவமனை நிர்வாகம் எனது தந்தைக்கு இனி சிகிச்சை அளிக்க முடியாது என்று மறுத்துவிட்டதால்தான் அவரை வீட்டுக்கு கொண்டு வந்தோம்” என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகள்