காஷ்மீரில் 5 பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு உள்ளது.

Update: 2019-02-17 07:08 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் துணை ராணுவ வீரர்கள் கடந்த வியாழ கிழமை 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.  அவர்கள் வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி வெடிகுண்டு ஏற்றிய சொகுசு காரை கொண்டு மோதி வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து காஷ்மீர் சென்ற உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பிடம் இருந்து நிதி பெறுபவர்களுக்கான பாதுகாப்பு பற்றி மறுஆய்வு செய்யப்படும் என கூறினார்.

இந்த நிலையில், பிரிவினைவாத தலைவர்களான மீர்வாயிஜ் உமர் பரூக், அப்துல் கனி பாட், பிலால் லோன், ஹாசிம் குரேஷி மற்றும் ஷபீர் ஷா ஆகிய 5 பேருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.  இந்த பாதுகாப்பினை திரும்ப பெற காஷ்மீர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஆனால் இந்த உத்தரவில் பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத தலைவர் சையது கிலானியின் பெயர் குறிப்பிடப்படவில்லை.  இந்த உத்தரவின்படி அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து பாதுகாப்பு மற்றும் வாகனங்கள் இன்று மாலைக்குள் திரும்ப பெறப்படும்.

அவர்களுக்கோ அல்லது பிற பிரிவினைவாதிகளுக்கோ பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பும் வழங்கப்படாது.  அரசால் வேறு ஏதேனும் சலுகைகள் வழங்கப்பட்டால் அவை திரும்ப பெறப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இந்த பாதுகாப்பு விசயங்கள் பற்றி போலீசார் ஆய்வு செய்து அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்