இளைஞர்கள் மோசமான பாதையில் செல்வதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் - பயங்கரவாதியின் தந்தை

இளைஞர்கள் மோசமான பாதையில் செல்வதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பயங்கரவாதியின் தந்தை கூறியுள்ளார்.

Update: 2019-02-17 13:28 GMT
40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த புல்வாமா தாக்குதலை நடத்திய பயங்கரவாதி அகமது தாரின் தந்தை குலாம் ஹசன் இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதால் எங்களுக்கு மகிழ்ச்சி கிடையாது.   வீரர்களை இழந்து அவர்களின் குடும்பத்தினர் அனுபவிக்கும் வலி எங்களுக்கு புரிகிறது. இந்த வலியைத்தான் நான் காஷ்மீரில் காலங்காலமாக அனுபவித்து வருகிறோம். என் மகனை இழந்து தவிக்கும் இந்நேரத்தில் இளைஞர்களுக்கு எந்தவிதமான செய்தியும் கூற நான் விரும்பவில்லை. 

ஆனால், அரசுக்கு நான் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால், விரைவில் இந்த பயங்கரவாத பிரச்சினைக்கும், வன்முறைக்கும் தீர்வு கண்டு, இளைஞர்கள் மோசமான பாதையில் செல்வதை தடுத்து நிறுத்துங்கள் என்பதுதான்.

என்னுடைய மகன் கடந்த ஆண்டு மார்ச் 18-ம் தேதி திடீரென்று காணாமல் போனான். அதன்பின் அவனைக் கண்டுபிடிக்க பல முயற்சி எடுத்தும் முடியவில்லை. ஆனால், எப்படியும் வருவான் என்று நம்பி இருந்தேன். ஆனால், இனிமேல் வரமாட்டான் என்று தெரிந்துவிட்டது. நிச்சயமாக என் மகன் பணத்துக்காக தீவிரவாத அமைப்பில் சேர்ந்திருக்கமாட்டான். அவனுக்குப் படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது என்று கூறியுள்ளார். 

“என்னுடைய மகன் பயங்கரவாதியாவான் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதனை நான் நினைக்கவில்லை. நான் படிக்காதவன்தான், என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. அவனுக்கு பயங்கரவாத இயக்கத்தில் இணையும் எண்ணம் எதுவும் கிடையாது. மாயமானபோது 12-ம் வகுப்பு தேர்வுதான் எழுதினான். யாரும் பயங்கரவாதி ஆக கூடாது என்பதுதான் என்னுடைய விருப்பம் ஆகும்.  காஷ்மீரில் உள்ள பிரச்சனைக்கு தீர்வு இல்லை என்பது பிரச்சனையாக உள்ளது. பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்,” எனவும் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்