ஜம்முவில் 4-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 4-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-02-18 08:28 GMT
ஜம்மு,

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ரிசர்வ் படையினர்) மீது கடந்த 14-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து மாநிலத்தில் ஆங்காங்கே கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. 

குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதைத்தொடர்ந்து, வன்முறை சம்பவங்கள் பரவாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 150-க்கும் மேற்பட்டோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

ஜம்மு நகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்முவின் தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்த பின்னர், ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதா? அல்லது ரத்து செய்வதா? என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். 

ராணுவம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. ஹெலிகாப்டர் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலமாகவும் நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.  ஜம்முவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்