நாட்டிலேயே முதல் முறையாக கேரள போலீஸ் டி.ஜி.பி. அலுவலக பணியில் ‘ரோபோ’ - பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்

நாட்டிலேயே முதல் முறையாக கேரள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் ரோபோவின் பணியினை பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.

Update: 2019-02-20 21:15 GMT
திருவனந்தபுரம்,

கேரள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் முதல் முறையாக ரோபோவை பணியில் அமர்த்தி அந்த மாநில போலீசார் சாதனை படைத்துள்ளனர். ‘கே.பி.பாட்’ என்ற பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் ரேங்க் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ள இந்த ரோபோவுக்கு முதல் கட்டமாக வரவேற்பாளர் பணி வழங்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வரும் பார்வையாளர்களை வரவேற்று அடையாள அட்டை வழங்கவும், உயர் அதிகாரிகளுடன் அவர்களது சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கவும், புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யவும் பணி ஒதுக்கப்பட்டு உள்ளது.

மேலும் டி.ஜி.பி. அலுவலகத்துக்குள் சமூக விரோதிகள் யாரும் நுழையாமல் தடுக்கும் வகையில், அவர்களை இனம் கண்டுகொள்வதற்காக அதனுள் விசேஷ கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது. அத்துடன் உயர் அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வணக்கம் செய்யவும் இந்த ரோபோவால் முடியும்.

பெண் உருவத்தில் இருக்கும் இந்த ரோபோவால் ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் பேசவும் முடியும். மனித உருவில் தயாரிக்கப்பட்டு உள்ள இத்தகைய ரோபோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த ரோபோவை முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்