இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு

இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இதை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.

Update: 2019-02-20 23:45 GMT
புதுடெல்லி,

சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நேற்றுமுன்தினம் டெல்லிக்கு வந்தார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் நேற்று சம்பிரதாயபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் பிரதமர் நரேந்திர மோடியும், இளவரசர் முகமது பின் சல்மானும் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு இந்தியாவுக்கு சவுதி அரேபியா முழு ஒத்துழைப்பு தரும் என அவர் உறுதி அளித்தார்.

இரு தரப்பிலும் 5 ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.

இந்த சந்திப்பின்போது, இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்வதற்கு சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் சல்மான் முன் வந்துள்ளார். இதை மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரவீஷ் குமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “சவுதி அரேபியா மிகப்பெரிய அறிவிப்பாக இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.7¼ லட்சம் கோடி) முதலீடு செய்வதாக கூறி உள்ளது. இது இந்திய பொருளாதாரத்தின் மீது அவர் வைத்துள்ள மிகப்பெரிய நம்பிக்கையை காட்டுகிறது” என கூறி இருக்கிறார்.

சவுதி அரேபியா மிகப்பெரிய அளவில் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வந்திருப்பதை பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார்.

சவுதி அரேபியா இந்த முதலீட்டை எரிசக்தி, சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல், உள்கட்டமைப்பு, விவசாயம், உற்பத்தி ஆகிய துறைகளில் செய்யும் என தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்