காஷ்மீரில் வர்த்தக விமானத்தில் துணை ராணுவ படையினர் பயணிக்க மத்திய அரசு அனுமதி

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பணிபுரியும் துணை ராணுவ படையினர் வர்த்தக விமானத்தில் பயணிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.

Update: 2019-02-21 09:31 GMT
புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி கடந்த வாரம் தற்கொலை தாக்குதல் நடத்தினான்.  இந்த கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பணிபுரியும் மத்திய ரிசர்வ் போலீசார் மற்றும் பிற துணை ராணுவ படையினர் வர்த்தக விமானத்தில் பயணிக்க மத்திய உள்விவகார துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அவர்கள் பணியில் சேருவதற்கோ அல்லது விடுமுறையில் செல்வதற்கோ டெல்லி-ஸ்ரீநகர், ஸ்ரீநகர்-டெல்லி, ஜம்மு-ஸ்ரீநகர் மற்றும் ஸ்ரீநகர்-ஜம்மு ஆகிய பிரிவுகளில் வான்வழியே விமான பயணம் மேற்கொள்ளலாம்.

இந்த முடிவால் கான்ஸ்டபிள், தலைமை கான்ஸ்டபிள் மற்றும் உதவி ஆய்வாளர் என இதுவரை பயன் வழங்கப்படாதோர் உள்ளிட்ட 7.8 லட்சம் துணை ராணுவ படையினர் உடனடி பலனை பெறுவர்.

மேலும் செய்திகள்