‘பருவநிலை மாற்றமும், பயங்கரவாதமும் மனிதனுக்கு பெரும் சவால்’ சியோலில் காந்தியடிகள் சிலையை திறந்து மோடி பேச்சு

தென்கொரியாவில் காந்தியடிகள் சிலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, பருவநிலை மாற்றமும், பயங்கரவாதமும் மனிதனுக்கு பெரும் சவாலாக இருப்பதாக கூறினார்.

Update: 2019-02-21 23:45 GMT
சியோல்,

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியாவும், இந்தியாவும் நீண்ட காலமாக நட்பு நாடுகளாக விளங்கி வருகின்றன. இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தங்கள் நாட்டுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று தென்கொரியா சென்றார்.

அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குறிப்பாக தலைநகர் சியோலில் உள்ள புகழ்பெற்ற யோன்செய் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டு இருக்கும் காந்தியடிகளின் மார்பளவு சிலையை, அந்த நாட்டு அதிபர் மூன் ஜே இன், மற்றும் ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் பான்கீமூன் ஆகியோருடன் இணைந்து அவர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றும் போது மோடி கூறியதாவது:-

மிகப்பெரிய கவுரவம்

சியோல் பல்கலைக்கழகத்தில் பாபுவின் (காந்தியடிகள்) சிலையை திறப்பது மிகப்பெரிய கவுரவம் ஆகும். அதுவும் அவரது 150-வது ஆண்டை நாங்கள் கொண்டாடி வரும் இந்த நேரத்தில் நடந்திருக்கும் இந்த நிகழ்வு, மேலும் சிறப்பு மிக்கதாக இருக்கிறது. தனது வாழ்நாள் முழுவதும் இயற்கையோடு இணைந்து வாழ்வதை உலகுக்கு காட்டினார், காந்தியடிகள்.

மேலும் அடுத்த தலைமுறைக்கு தூய்மை மற்றும் பசுமையான பூமியை விட்டு செல்வதன் முக்கியத்துவத்தையும் அவர் உணர்த்தினார். தற்போதைய காலகட்டத்தில் பயங்கரவாதமும், பருவநிலை மாற்றமும் மனிதனுக்கு பெரும் சவாலாக விளங்கி வருகிறது. ஆனால் இதில் இருந்து மீண்டு வருவதற்கு காந்தியடிகளின் எண்ணமும், கொள்கைகளும் நமக்கு உதவிபுரியும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

வர்த்தக கருத்தரங்கு

முன்னதாக தென்கொரிய வர்த்தக தலைவர்கள் பங்குபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் அவர் உரையாற்றும்போது, ‘இந்தியாவை தவிர உலகில் எந்தவொரு பெரிய நாடும் ஆண்டுக்கு 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை கொண்டிருக்கவில்லை. எங்கள் பொருளாதார அடித்தளம் வலிமையானது. எனவே வெகுவிரைவில் எங்கள் பொருளாதார வளர்ச்சி 5 டிரில்லியன் டாலரை (சுமார் ரூ.350 லட்சம் கோடி) எட்டும்’ என்றார்.

மேலும் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு கொரிய வர்த்தகர்களுக்கு அவர் அழைப்பும் விடுத்தார். இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கான வழிகளை அரசு எளிமைப்படுத்தி இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சியோல் அமைதி விருது

இதற்கிடையே தென்கொரியாவில் வாழும் இந்தியர்களையும் அவர் சந்தித்து பேசினார். தனது பயணத்தின் முக்கிய அம்சமாக, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அதிபர் மூன் ஜே இன் மற்றும் தென்கொரிய உயர்மட்ட தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் அமைதி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் பிரதமர் மோடிக்கு, தென்கொரியாவின் சியோல் அமைதி விருது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. சியோல் அமைதி விருது கலாசார அறக்கட்டளை சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடிக்கு அந்த விருது வழங்கப்படுகிறது.

பிரதமர் மோடி ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு தென்கொரிய பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், 2-வது முறையாக மீண்டும் அவர் அந்த நாட்டுக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்