காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம்: ஐ.நா. நடவடிக்கைக்கு இந்தியா வரவேற்பு

காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஐ.நா.வின் அறிக்கையை இந்தியா வரவேற்றுள்ளது.

Update: 2019-02-22 18:15 GMT
புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் 40 துணை ராணுவவீரர்களை பலிகொண்ட பயங்கரவாத தாக்குதல் கோழைத்தனமானது என கண்டனம் தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை வெளியிட்டது. எந்த வடிவிலான பயங்கரவாதத்தையும் ஏற்க முடியாது என்றும், புலவாமா தாக்குதலுக்கு காரணமான அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்தது.

இந்த நிலையில் புலவாமா தாக்குதலை கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை வெளியிட்டதை இந்தியா வரவேற்றுள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் டுவிட்டரில் “புலவாமா தாக்குதலை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வன்மையாக கண்டித்தது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், புலவாமா தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சர்வதேச அழுத்தங்களுக்கு உள்ளாகி இருக்கிறது” என்று கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்