கடந்த 5 ஆண்டுகளில் 1.3 கோடி வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம்; பிரதமர் மோடி

கடந்த 5 ஆண்டுகளில் 1.3 கோடி வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம் என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2019-03-03 01:12 GMT
புதுடெல்லி, 

டெல்லியில் நடந்த கட்டுமான தொழில்நுட்ப மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இதுவரை 1.3 கோடி வீடுகள் கட்டியுள்ளது. முந்தைய அரசு 25 லட்சம் வீடுகள் தான் கட்டியது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை நிறைவேற்றுவோம் என்று நாங்கள் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் எவ்வளவு தீவிரமாக இருக்கிறோம் என்பதை இது காட்டுகிறது.

புதிதாக கட்டப்படும் வீடுகளில் குடிநீர், மின்சாரம், சமையல் கியாஸ் மற்றும் இதர வசதிகள் இருப்பதையும் நாங்கள் உறுதி செய்கிறோம். வீடுகளின் தரம் மற்றும் இடவசதி ஆகியவையும் கடந்த 4½ ஆண்டுகளில் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது. எனவே இதில் தனியார் துறைகளும் ஆதரவு தரவேண்டும். ஏழைகளுக்கு உதவி செய்ய நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.

வீடுகள் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வாங்குவோரின் பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டு சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது.

வீடுகள் தேவை வேகமாக அதிகரித்துவரும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதனை நிறைவேற்ற கட்டுமான தொழிலில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. எனவே 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரை கட்டுமான தொழில்நுட்ப வருடமாக அறிவிக்கிறேன். எனவே இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உலகில் கிடைக்கும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதிய வேகம் கொடுக்க வேண்டும்.

வீடு என்பது 4 சுவர்கள் மட்டுமல்ல. ஒருவர் தனது கனவுகளையும், ஆசைகளையும் நிறைவேற்றும் உரிமை படைத்த இடமாக இருக்க வேண்டும். ஒரு வீடு உறைவிடத்துக்கு மேலாக கண்ணியம் மிக்கதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் பலர் தங்களுக்கு சொந்தமாக வீடு இல்லாமல் இருப்பது எனக்கு அதிர்ச்சியாகவும், கவலையாகவும் இருக்கிறது.

இந்த பிரச்சினையை தீர்க்கவும், வேகமாக நகர்மயம் ஆக்குவதற்கும் பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டம், ஸ்மார்ட் நகரங்கள் போன்ற பல திட்டங்கள் மூலம் நாங்கள் பணியாற்றி வருகிறோம். 2022ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்தியனும் சரியான வீடு பெறவேண்டும் என்பதே எனது கனவு.  இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மேலும் செய்திகள்