80 சதவீதம் துல்லிய தாக்குதல் : 12 சேட்டிலைட் புகைப்படங்கள் அரசிடம் ஒப்படைப்பு - விமானப்படை

80 சதவீதம் துல்லிய தாக்குதல் நடந்துள்ளது. 12 சேட்டிலைட் புகைப்படங்கள் அரசிடம் சமர்பிக்கப்பட்டு உள்ளதாக விமானப்படை தகவல் வெளியிட்டு உள்ளது.

Update: 2019-03-06 12:25 GMT
புதுடெல்லி,

புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்திய வான்படை பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 

இந்த நிலையில் சான்பிரான்சிஸ்கோவில் இருக்கும் தனியார் சேட்டிலைட் ஆபரேட்டர் பிளானெட் லேப்ஸ் பாலகோட் தாக்குதல் தொடர்பாக சேட்டிலைட்  படங்களை எடுத்துள்ளது. அந்த படங்களில் மார்ச் 4ம் தேதியன்று, இந்தியத் தாக்குதலுக்கு 6 நாட்களுக்குப் பிறகும் அந்த இடத்தில் 6 கட்டிடங்கள் அங்கு முழுமையாக இருப்பதைக் காட்டுகிறது.



இதுவரை இதுபோன்ற உயர் தொழில்நுட்ப சேட்டிலைட் இமேஜ்கள் பொதுவெளிக்குக் கிட்டியதில்லை. இந்த படங்களில் மத்திய அரசு தாக்கியதாகக் கூறப்படும் அதே கட்டிடங்கள் அப்படியேதான் இருக்கின்றன.

ஏப்ரல் 2018-ல் எடுக்கப்பட்ட சேட்டிலைட் படங்களில் காட்டப்பட்ட அதே நிலைகள் அப்படியே இந்த படங்களிலும் இருக்கின்றன. கட்டிடங்களின் மேற்கூரையில் கூட கண்ணுக்குத் தெரியும் ஓட்டைகள் எதுவும் இல்லை. சுவற்றில் பிளவுகள் இல்லை. மதரசா அருகே உள்ள மரங்கள் சாய்ந்ததாகக் கூட அறிகுறி இல்லை என்கிறது ராய்ட்டர்ஸ் ஆய்வு.  சுருக்கமாக வான் வழித்தாக்குதல் நடந்ததற்கான தடயங்கள் இந்த நிலைகளின் மீது இல்லை என்கிறது இந்த புகைப்படங்கள்.



இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திடம் மின்னஞ்சல் மூலம் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் எதுவும் வரவில்லை.

இந்திய விமானப்படை  தற்போது இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில், "80 சதவிகித குண்டுகள் சரியாக இலக்கை தாக்கியுள்ளது. இதுதொடர்பான ஆவணங்கள் மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை மிகவும் துல்லியமான 12 சேட்டிலைட் புகைப்படங்களை அரசிடம் ஆவணங்களுடன் சமர்பித்துள்ளது. இந்திய விமானப்படை வீசிய குண்டுகளில் 80 சதவீதம் இலக்கை துல்லியமாக தாக்கி, கட்டிடத்தின் மேற்பகுதியை துளைத்து உள்ளே புகுந்து வெடித்தது, சேதத்தை ஏற்படுத்தியது" என கூறியுள்ளது. 

மேலும் செய்திகள்