3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. மனு

தமிழகத்தில் விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. மனு அளித்து உள்ளது.

Update: 2019-03-12 10:46 GMT
புதுடெல்லி,

தமிழகத்தில் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளை தவிர 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு அறிவித்தார். வழக்கு நிலுவையில் இருப்பதால், குறிப்பிட்ட 3 தொகுதிகளில் தேர்தல் நடத்த இயலாது எனவும் அவர் விளக்கம் அளித்தார். 

இதனிடையே, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, 18 தொகுதிகளோடு திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரத்தில் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில்  மனு தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தலைமை நீதிபதி முன்பு ஆஜராகி இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என முறையீடு செய்தார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை வரும் 15ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி அறிவித்தார்.

மேலும் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. மனு அளித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் வழக்கு நிலுவையை காரணம் காட்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தி.மு.க. எம்.பி.க்கள் சிவா, டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் டெல்லி தேர்தல் ஆணையத்துக்கு நேரில் வந்து மனு அளித்துள்ளனர். 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தலை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 

மேலும் செய்திகள்