உத்தரபிரதேசத்தில் எதிர்கட்சிகளை விட 20 பிரச்சாரக் கூட்டங்களில் பேசுகிறார் பிரதமர் மோடி

உத்தரபிரதேசத்தில் எதிர்கட்சிகளை விட 20 பிரச்சாரக் கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

Update: 2019-03-16 16:14 GMT
லக்னோ,

உத்தரபிரதேசத்தில் ஏப்ரல் 11-ல்  தொடங்கி மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத்தில் உத்தரபிரதேசத்தின் சஹரான்பூர், கைரனா, முசாபர் நகர், பிஜ்னோர், மீரட், பாக்பத், காஜியாபாத், அலிகர் மற்றும் கவுதம்புத் நகர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், ஏப்ரல் 7-ல் உ.பி.யின் சஹரான்பூரில் அகிலேஷ், மாயாவதி மற்றும் அஜித்சிங் இணைந்து பேசும் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜகவை எதிர்த்து மெகா கூட்டணி அமைத்த அகிலேஷ் யாதவ், மாயாவதி மற்றும் அஜித்சிங் மக்களவைத் தேர்தலுக்கு உத்தரபிரதேசத்தில் 11 கூட்டங்களில் பேசுகின்றனர். 

இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவும்  இதை விட அதிகமாக பிரதமர் நரேந்திர மோடி 20 பிரச்சாரக் கூட்டங்களில் பேச உள்ளதாக கூறப்படுகிறது. 

மொத்தம் 20 கூட்டங்களில் பேசவிருக்கும் மோடியின் கூட்டங்களுக்கு உள்ள ஆதரவைப் பொறுத்து அதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது.  

2017-ல் நடைபெற்ற உ.பி. சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி 12 கூட்டங்கள் திட்டமிட்டிருந்தார். பிறகு ஆதரவு அதிகரித்ததால் தன் பிரச்சாரக் கூட்டங்களின் எண்ணிக்கையை 21 எனக் கூட்டினார். இதனால், உத்தரபிரதேசத்தில்  பாஜக தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியையும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்