விளம்பர படத்தில் காட்சிப்பிழை : கிண்டலுக்கு ஆளான சந்திரபாபு நாயுடு

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகள் பல்வேறு வகையான பிரசாரங்களில் ஈடுபட்டு உள்ளதுடன், தங்களின் சாதனைகளையும் விளம்பரப்படுத்தி வருகின்றன.

Update: 2019-03-18 22:45 GMT

நகரி, 

தெலுங்குதேசம் கட்சி தயாரித்த விளம்பரம் ஒன்று அவர்களுக்கே பெரும் கேலியையும், கிண்டலையும் கொண்டு வந்திருக்கிறது.

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடப்பதால் ஆளும் தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர களப்பணி ஆற்றி வருகின்றன. அங்கு ஆட்சியை தக்க வைப்பதற்காக தங்கள் சாதனைகளை விளம்பரப்படங்களாக எடுத்து தெலுங்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வருகிறது, தெலுங்குதேசம் கட்சி.

அதில் ஒரு விளம்பரத்தில், ஒரு மாட்டையும், கன்றையும் வீட்டுக்கு கொண்டு வரும் பெண் ஒருவர், ‘மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வங்கி கணக்கில் சந்திரபாபு நாயுடு போட்ட ரூ.6 ஆயிரத்தை கொண்டு கன்றுடன் கூடிய கறவை மாட்டை (பசு) வாங்கி வந்தேன். இனி நமது கஷ்டமெல்லாம் தீரும்’ என தனது மகளிடம் கூறுவதாக காட்சி இடம்பெற்று உள்ளது.

ஆனால் அந்த படத்தில் கறவை மாட்டுக்கு பதிலாக காளை மாட்டை ஓட்டி வருவது தெளிவாக தெரிகிறது. இதைப்பார்த்த எதிர்க்கட்சிகளும், நெட்டிசன்களும் தெலுங்குதேசம் மற்றும் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.

நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நடிகை ரோஜாவும் தனது பிரசாரத்தில் இந்த விவகாரத்தை முன்வைத்து சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்தார்.

மேலும் செய்திகள்