எனது மதம் மனிதநேயம்; பா.ஜ.க.வுக்கு மம்தா பானர்ஜி பதிலடி

எனது மதம் மனிதநேயம் என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Update: 2019-03-19 15:00 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் ஹோலி பண்டிகை வருவதனையொட்டி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.  இதில் இவர் பேசும்பொழுது, எனது மதம்பற்றி சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.  எனது மதம் மனிதநேயம் என அவர்களுக்கு கூறி கொள்ள விரும்புகிறேன்.  மதம் பற்றிய மற்றவர்களின் சொற்பொழிவுகள் எனக்கு தேவையில்லை என கூறினார்.

அவரது மதம் பற்றி பா.ஜ.க. கேள்வி எழுப்பி வருவதுடன், திருப்திப்படுத்தும் அரசியலை அவர் பின்பற்றுகிறார் என்றும் குற்றச்சாட்டு கூறிவந்தது.

இதற்கு பதிலடி தரும் வகையில் பேசிய அவர், வங்காளத்தில் பூஜைகளை செய்ய நான் அனுமதிப்பதில்லை என பா.ஜ.க.வினர் என்னை நோக்கி கைகளை உயர்த்தி கூற முயல்கின்றனர்.  திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை கோவில்கள் கட்டப்பட்டு உள்ளன என அவர்களே சென்று காணட்டும் என்று கூறியுள்ளார்.

ஹோலி பண்டிகையை வண்ண பொடிகளுடன் கொண்டாடுவதில் நம்பிக்கை கொண்டவள் நான்.  சில பிரிவினரை போன்று பிறரின் ரத்தத்துடன் ஹோலி கொண்டாடுபவள் இல்லை.  பா.ஜ.க. போன்ற பிரிவினை சக்திகளிடம் இருந்து சமூக நல்லிணக்கத்தின் அர்த்தத்தினை நான் கற்று கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று டோல்ஜாத்ரா (வங்காளத்தில் வண்ணங்களின் திருவிழாவுக்கான பெயர்) மற்றும் ஹோலி பண்டிகையை மக்கள் எச்சரிக்கையுடன் கொண்டாட வேண்டும் என்றும் அந்த நாட்களில் அமைதிக்கு தீங்கு விளைவுக்கும் எந்த முயற்சியில் இருந்தும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்