ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: ராஜீவ் சக்சேனா அப்ரூவராக மாற சி.பி.ஐ கோர்ட்டு அனுமதி

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைதான இடைத்தரகர் ராஜீவ் சக்சேனா அப்ரூவராக மாறுவதற்கு, சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

Update: 2019-03-25 17:19 GMT
புதுடெல்லி,

மிக முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்கள் (அகஸ்டாவெஸ்ட்லேண்ட்) வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ரூ.3,600 கோடி முறைகேடாக பணபரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் இடைத்தரகராக செயல்பட்ட ராஜீவ் சக்சேனா கைது செய்யப்பட்டு, சமீபத்தில் உடல்நலக்குறைவால் ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில், இந்த வழக்கில் அப்ரூவராக மாறி சாட்சியம் அளிப்பதாக, டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் ராஜீவ் சக்சேனா கடந்த சில தினங்களுக்கு முன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

கடந்த 6-ந் தேதி நீதிபதி அறையில் நடந்த ரகசிய விசாரணையின்போது இவ்வழக்கில் அரசுதரப்பு சாட்சியாக (அப்ரூவராக) மாறி வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக ராஜீவ் சக்சேனா தெரிவித்திருந்தார். அமலாக்கத்துறை வழக்கறிஞரும் இதற்கு ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ராஜீவ் சக்சேனா அரசுதரப்பு சாட்சியாக மாறுவதற்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

மேலும் செய்திகள்