உத்தரபிரதேசத்தில் தேர்தலையொட்டி 1,700 ஜன்தன் வங்கி கணக்கில் தலா ரூ.10 ஆயிரம் டெபாசிட் - தேர்தல் கமிஷன் விசாரணை

உத்தரபிரதேசத்தில் தேர்தலையொட்டி 1,700 ஜன்தன் வங்கி கணக்குகளில் தலா ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில் தேர்தல் கமிஷன், வருமான வரித்துறை ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன.

Update: 2019-04-02 21:15 GMT
புதுடெல்லி,

பிரதமரின் ஜன்தன் யோஜனா என்ற பெயரில் ஏழை மக்களுக்கு வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டன. இதில் அரசு மானியங்கள், ஓய்வூதியம், காப்பீடு போன்றவற்றுக்காக பணம் அவர்கள் பெயரில் நேரடியாக செலுத்தப்படுகின்றன.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தலையொட்டி ஜன்தன் வங்கி கணக்கில் ஒரு அரசியல் கட்சி வேட்பாளர் சார்பில் தலா ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பு குழுவுக்கு புகார்கள் வந்தன.

உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள 1,700 ஜன்தன் வங்கி கணக்குகளில் தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.7 கோடி கடந்த சில நாட்களில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. விசாரணை மற்றும் புலனாய்வு பிரிவினர் இதனை கண்டுபிடித்துள்ளனர். இது ஏதாவது ஒரு அரசியல் கட்சி வேட்பாளர் தனக்கு ஓட்டு போடுவதற்காக வாக்காளர்களுக்கு கொடுத்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

வருமான வரித்துறையும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கியது. மற்ற விசாரணை அமைப்புகளுடன் சேர்ந்து கருப்பு பணம் நடமாட்டம் மற்றும் சட்டவிரோதமாக வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்க முயற்சி நடைபெறுகிறதா? என்றும் சோதனை செய்யப்படுகிறது.

தேர்தல் கமிஷன் இதுதொடர்பாக விசாரணை அமைப்புகளிடம் இருந்து அறிக்கை கேட்டுள்ளது. அதேபோல சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கும் இந்த பணப்பரிமாற்றம் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறும்போது, “அடுத்தகட்ட விசாரணை தொடங்கியுள்ளது. இது அரசு திட்டங்களுக்காக போடப்பட்ட பணமா? அல்லது தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது” என்றனர்.

மேலும் செய்திகள்