சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள்; நக்சலைட்டுகள் பாதித்த பகுதியை சேர்ந்த பெண் 12வது இடம்

நக்சலைட்டுகள் பாதித்த சத்தீஷ்காரின் தன்டேவாடா பகுதியை சேர்ந்த இளம்பெண் சிவில் சர்வீசஸ் தேர்வில் 12வது இடம் பிடித்துள்ளார்.

Update: 2019-04-14 07:53 GMT
புதுடெல்லி,

மத்திய அரசால் நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு 2018ற்கான முடிவுகள் கடந்த 5ந்தேதி வெளியானது.  இதில் கனிஷக் கட்டாரியா என்பவர் முதல் இடம் பிடித்துள்ளார்.

இந்த தேர்வில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஷ்காரின் தன்டேவாடா மாவட்டத்தின் கீடம் நகரை சேர்ந்த இளம்பெண் நம்ரதா ஜெயின் (வயது 25) என்பவர் 12வது இடம் பிடித்துள்ளார்.

இவர் கடந்த 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வில் 99வது இடம் பெற்றவர்.  இவரது தந்தை உள்ளூரிலேயே தொழிலதிபராக உள்ளார்.  தாயார் வீட்டு பணிகளை கவனித்து கொள்கிறார்.  இவரின் சகோதரர் பட்டய கணக்காளராக வர விரும்புகிறார்.

தனது 10ம் வகுப்பு வரை தன்டேவாடா பகுதியில் படித்த நம்ரதா, பிலாய் நகருக்கு சென்று பொறியியல் பட்ட படிப்பு படித்துள்ளார்.  இந்த முறை ஐ.ஏ.எஸ். பணியை பெற்று விடும் நம்பிக்கையில் உள்ளார்.

இந்த வெற்றி பற்றி அவர் கூறும்பொழுது, ஆட்சியராக வரவே எப்பொழுதும் நான் விரும்பினேன்.  நான் வசிக்கும் பகுதி நக்சலைட்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி.  இங்குள்ள மக்கள் கல்வி போன்ற அடிப்படை வசதியின்றி உள்ளனர்.  எனது மாநில மக்களுக்காக சேவையாற்ற நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்