தெலுங்கானா, மராட்டியத்தில் சோதனை: ஒரு பெண் உள்பட ஐ.எஸ். ஆதரவாளர் 2 பேர் கைது - தேசிய புலனாய்வுத்துறை அதிரடி

தேசிய புலனாய்வுத்துறையினரால் தெலுங்கானா, மராட்டியத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ஒரு பெண் உள்பட ஐ.எஸ். ஆதரவாளர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-04-20 22:45 GMT
புதுடெல்லி,

ஈராக் மற்றும் சிரியாவில் இயங்கி வரும் ஐ.எஸ். அமைப்புக்கு இந்தியாவில் ஆள் சேர்க்கும் பணிகளில் பல்வேறு அமைப்புகள் இயங்கி வருகின்றன. இவ்வாறு ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக இயங்கி வந்த முகமது அப்துல் காதிர், முகமது அப்துல்லா பாசித் ஆகிய இருவரை கடந்த ஆண்டு தேசிய புலனாய்வுத்துறை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் ஐதராபாத்தில் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஐதராபாத் மற்றும் மராட்டியத்தின் வார்தா மாவட்டத்தில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அப்துல் பாசித்தின் 2-வது மனைவி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே உத்தரபிரதேசத்தின் அம்ரோகா பகுதியை சேர்ந்த முகமது குப்ரான் என்ற ஐ.எஸ். ஆதரவாளரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர். ஐ.எஸ். ஆதரவு அமைப்பான ஹர்கத் உல் ஹர்ப்-இ-இஸ்லாம் அமைப்பை சேர்ந்த இவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார் என அதிகாரிகள் கூறினர்.

இந்த அமைப்பை சேர்ந்த 12 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் முகமது குப்ரான் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்