அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக பதிவு செய்ய டி.டி.வி. தினகரன் சார்பில் தேர்தல் கமிஷனில் விண்ணப்பம்

அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக பதிவு செய்ய கோரி டி.டி.வி.தினரகன் சார்பில் தேர்தல் கமிஷனில் நேற்று விண்ணப்பிக்கப்பட்டது.

Update: 2019-04-22 21:51 GMT
புதுடெல்லி,

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஆளும் அ.தி.மு.க. தரப்புக்கும், சசிகலா தரப்புக்கும் இடையே சட்ட போராட்டம் நடைபெற்றது. சசிகலா தரப்பில் டி.டி.வி.தினகரன் கடுமையாக போராடினார். இருப்பினும் ஆளுங்கட்சி தரப்புக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கப்பட்டது. இதை எதிர்த்து டி.டி.வி. தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இதற்கிடையே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை தொடர்ந்து தேர்தல் நடவடிக்கைகளுக்காக ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற அமைப்பை கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி அவர் தொடங்கினார். மேலும் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு வசதியாக தனது அமைப்புக்கு குக்கர் சின்னத்தை வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்தார். ஆனால் குக்கர் சின்னத்தை வழங்க தேர்தல் கமிஷன் மறுத்துவிட்டது.

இதனால் கடந்த 18-ந்தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது. சின்னம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணை நடந்த போது, பொது சின்னத்துக்காக அ.ம. மு.க.வை அரசியல் கட்சியாக பதிவு செய்ய தயார் என்று டி.டி.வி.தினகரன் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதன்படி அ.ம.மு.க.வை கடந்த 19-ந்தேதி அரசியல் கட்சியாக டி.டிவி.தினகரன் அறிவித்தார். அத்துடன் அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அ.ம.மு.க.வை தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.

அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பத்தை டி.டி.வி.தினகரன் சார்பில் அவருடைய வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் நேற்று டெல்லியில் தேர்தல் கமிஷனிடம் வழங்கினார். காலை 10.25 மணிக்கு அந்த விண்ணப்பம் தேர்தல் கமிஷனால் முத்திரையிட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த விண்ணப்பத்தை தேர்தல் கமிஷன் விரைந்து பரிசீலிக்கும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்