8 மாநிலங்களில் பயங்கரவாத தாக்குதல், ஏமாற்று அழைப்பு விடுத்தவர் கைது

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் என்று பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஏமாற்று அழைப்பை விடுத்தவரை போலீஸ் கைது செய்தது.

Update: 2019-04-27 11:45 GMT
கர்நாடக மாநிலம் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஓசூரில் இருந்து நேற்று பகலில் மர்ம ஆசாமி ஒருவர் போனில் பேசி திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். 

ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா, மராட்டியம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில், முக்கியமான நகரங்களில் குண்டு வெடிக்கும் என்றும், ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் இதற்காக நுழைந்துள்ளார்கள் என்றும், குறிப்பாக தென்னக ரெயில்களில் குண்டு வெடிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தகவலை கூறிவிட்டு, அந்த மர்ம நபர் போனை வைத்துவிட்டார்.

இந்த தகவலையொட்டி, பெங்களூரு போலீசார் தமிழ்நாடு உள்ளிட்ட மேற்கண்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பினார்கள். இந்த தகவலை முக்கியமான தகவலாக கருதி, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெங்களூரு போலீசார் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து மேல் கூறப்பட்ட மாநிலங்களில் அதிதீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்நிலையில் போனில் தகவல் தெரிவித்தவர் ஏமாற்று அழைப்பை விடுத்தவர் என தெரியவந்துள்ளது. அந்நபர் சுவாமி சுந்தர் மூர்த்தியென தெரியவந்துள்ளது. அவரை பெங்களூரு போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது. இதற்கிடையே அவர் முன்னாள் ராணுவ வீரர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்