அயோத்தி விவகாரத்தில் இணக்கமான தீர்வு காண சமரச குழுவுக்கு, ஆகஸ்டு 15-ந் தேதி வரை அவகாசம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அயோத்தி விவகாரத்தில் இணக்கமான தீர்வு காண்பதற்கு சமரச குழுவுக்கு ஆகஸ்டு 15-ந் தேதி வரை அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-05-10 22:00 GMT
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்கு உரிய பாபர் மசூதி மற்றும் ராம ஜென்மபூமி அமைந்திருந்த இடம் என கூறப்படுகிற 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பதில் இன்னும் இழுபறி நிலைதான் நீடித்து வருகிறது.

இது தொடர்பான வழக்கை அலகாபாத் ஐகோர்ட்டின் 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்து, சர்ச்சைக்கு உரிய அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அஹாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று 2010-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து 14 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீடுகள், 8 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வுகாணும் யோசனையை சுப்ரீம் கோர்ட்டு முன் வைத்தது.

மேலும், சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரைக் கொண்ட சமரச குழுவை அமைத்தது. இந்த குழு, 8 வாரங்களுக்குள் பேச்சுவார்த்தையை நடத்தி முடிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் அயோத்தி மேல்முறையீட்டு வழக்குகள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது நீதிபதிகள், “சமரச குழுவின் தலைவரான நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவிடம் இருந்து கடந்த 7-ந் தேதி ஒரு அறிக்கை வந்துள்ளது. அதில் சமரச பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதில், இணக்கமான தீர்வு காண்பதற்கு ஆகஸ்டு 15-ந் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. சமரச குழுவினர், நல்ல முடிவு ஏற்படும் என நம்பிக்கை கொண்டுள்ளனர். அப்படி இருக்கிறபோது, அவர்களுக்கு ஆகஸ்டு 15-ந் தேதி வரை அவகாசத்தை நீட்டிப்பதால் என்ன பாதிப்பு வந்து விடப்போகிறது? இந்த விவகாரம் பல்லாண்டு காலமாக நிலுவையில் உள்ளது. நாம் ஏன் அவகாசம் வழங்கக்கூடாது? நாங்கள் அந்த அவகாசத்தை வழங்க விரும்புகிறோம்” என கருத்து தெரிவித்தனர்.

மேல்முறையீடு செய்துள்ள இந்து மற்றும் முஸ்லிம் தரப்பு வக்கீல்கள், சமரச நடவடிக்கையில் நம்பிக்கை தெரிவித்தனர். அத்துடன், இதில் தாங்கள் முழு ஒத்துழைப்பு தருவதாகவும் தெரிவித்தனர்.

ஒரு தரப்பினரின் வக்கீல் மட்டும், “நாம் 8 வாரம் அவகாசம் தந்தோம். இப்போது 9 வாரங்கள் கடந்து விட்டன” என கூறினார்.

அதற்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, “நாங்கள் 8 வாரம் அவகாசம் தந்தோம். இப்போது அறிக்கை வந்துள்ளது. சமரச குழுவின் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை கூற நாங்கள் விரும்பவில்லை” என குறிப்பிட்டனர்.

அப்போது மேல்முறையீடு செய்துள்ள தரப்பினரில் ஒருவரது வக்கீல் கூறும்போது, “13 ஆயிரத்து 990 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளன. அவை வட்டார மொழிகளில் அமைந்துள்ளன. சில மொழி பெயர்ப்புகள் தவறாக உள்ளன. அது பிரச்சினையை ஏற்படுத்தும்” என கூறினார்.

அதற்கு நீதிபதிகள், “மொழிபெயர்ப்புகள் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் அது தொடர்பாக ஜூன் 30-ந் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம்” என கூறினர்.

அதைத் தொடர்ந்து சமரச குழுவுக்கு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிவரை அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்