ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் இந்துவாக இருக்க முடியாது: பிரதமர் மோடி

ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் இந்துவாக இருக்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-15 05:14 GMT
புதுடெல்லி,

தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜை ஆதரித்து, அங்குள்ள பள்ளப்பட்டியில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரசாரம் செய்தார். 

அப்போது அவர், “சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து; அவர் தான் நாதுராம் கோட்சே” என்று பேசினார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசனின் கருத்துக்கு பாரதீய ஜனதா கட்சி, அ.தி.மு.க. மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மத கலவரத்தை தூண்டும் வகையில் கமல்ஹாசன் பேச்சு அமைந்துள்ளதாக கூறி, அவரது பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்; அத்துடன் அவர் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் வக்கீல் அஸ்வினி குமார் உபாத்யாயா மனு தாக்கல் செய்துள்ளார்.

கமல்ஹாசனுக்கு கடும் நெருக்கடியை மேற்கூறிய விவகாரம் அளித்துள்ளது. இந்த சூழலில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் இந்துவாக இருக்க முடியாது. உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை” என்றார். 

மேலும் செய்திகள்