பிரதமர் மோடி 1988-ல் இ-மெயில் பயன்படுத்தியிருக்க வாய்ப்பே கிடையாது - பி.கே.சிங்கால்

1988-ம் ஆண்டு பிரதமர் மோடி இ-மெயிலை பயன்படுத்தியிருக்க வாய்ப்பே கிடையாது என இந்தியாவிற்கு இன்டர்நெட் வசதியை அறிமுகம் செய்த விதிஷ் சஞ்சார் நிகாம் லிமிடெட் முன்னாள் தலைவர் பி.கே. சிங்கால் கூறியுள்ளார்.

Update: 2019-05-17 09:25 GMT
பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை  நியூஸ் நேஷன் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து பேசுகையில், கடந்த 1987-88 காலகட்டத்தில் இந்தியாவில் இ-மெயில் மற்றும் டிஜிட்டல் கேமரா தொழில்நுட்பத்தை பயன்படுத்திய மிகச் சில நபர்களில் நானும் ஒருவன். அந்த காலகட்டத்தில் அத்வானியின் பேரணி ஒன்று நடைபெற்றது. அப்போது என்னிடம் இருந்த டிஜிட்டல் கேமராவில் அத்வானியை புகைப்படமாக எடுத்து, அதை தில்லிக்கு அனுப்பி வைத்தேன். அடுத்த நாள் பிரசுரமாகிய அந்த புகைப்படத்தைக் கண்டு அத்வானி ஆச்சர்யமடைந்தார் எனக் கூறியிருந்தார். 

பிரதமர் மோடியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் நகைப்புக்கு உள்ளாகியது. பிரதமர் மோடியால் மட்டுமே இ-மெயில் அறிமுகம் செய்யப்படுவதற்கு 7 ஆண்டுகளுக்கு முன்னதாக பயன்படுத்த முடியும் என கேலிகள் டுவிட்டரில் பறந்தது.

இந்நிலையில் இந்தியாவிற்கு இன்டர்நெட் வசதியை அறிமுகம் செய்த விதேஷ் சஞ்சார் நிகாம் லிமிடெட் முன்னாள் தலைவர் பி.கே. சிங்கால் 1988-ம் ஆண்டு பிரதமர் மோடி இ-மெயிலை பயன்படுத்தியிருக்க வாய்ப்பே கிடையாது எனக் கூறியுள்ளார். மோடியின் கூற்றை முற்றிலுமாக நிராகரித்த சிங்கால், 1995-ம் ஆண்டுக்கு முன்னதாக  ERNET வசதியை கொண்டிருந்தது, அதுவும் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களுக்குதான் அந்த வசதியிருந்தது. பிரதமர் மோடி 1980-களில் இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்தி, புகைப்படத்தை அனுப்பியிருக்க வாய்ப்பே கிடையாது என சிங்கால் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்