440 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த 4 வயது சிறுமியின் உடலை மீட்பு குழுவினர் இன்று மீட்டனர்.

Update: 2019-05-21 09:58 GMT
ஜோத்பூர்,

ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் வசித்து வந்த சிறுமி சீமா (வயது 4).  இவளது தந்தை, தனது விவசாய நிலத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றில் பழுதடைந்த குழாய் ஒன்றை நேற்று மதியம் வெளியே எடுத்து உள்ளார்.  இதன்பின் அதனை மூடாமல் அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளார்.  அங்கு விளையாடி கொண்டிருந்த அவரது 4 வயது மகள் திடீரென அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டாள்.

இந்த கிணறு 9 அங்குல அகலமும், 440 அடி ஆழமும் கொண்டது.  இதுபற்றிய தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மேலாண் படையினர் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

சிறுமி நேற்று மாலை 5.30 மணியளவில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துள்ளாள்.  260 அடி ஆழத்தில் விழுந்த சிறுமியின் அழுகுரல் தொடக்கத்தில் மீட்பு குழுவினருக்கு கேட்டுள்ளது.  நள்ளிரவில் இந்த சத்தம் நின்றுள்ளது.  குழாய் ஒன்றின் வழியே பிராணவாயு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிறுமி உயிருடன் இல்லை என்ற முடிவுக்கு வந்த மீட்பு குழுவினர் மற்றும் அதிகாரிகள் கயிறு ஒன்றை உள்ளே போட்டு சிறுமியின் உடலை இன்று காலை 7.30 மணியளவில் வெளியே மீட்டனர்.  தொடர்ந்து 14 மணிநேரம் போராடி சிறுமியின் உடலையே மீட்க முடிந்துள்ளது.

இதுபற்றி கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் மதிபால் பரத்வாஜ் கூறும்பொழுது, அனைத்து முயற்சிகள் எடுத்தபொழுதும், எங்களால் சிறுமியை உயிருடன் மீட்க முடியவில்லை.  சிறுமியின் உடல்  வெளியே எடுக்கப்பட்டது.  முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து சிறுமியின் பெற்றோருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரலில் இதுபோன்று 3 வயது சிறுமி ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறி விழுந்து விட்டாள்.  இதன்பின் 2 மணிநேர போராட்டத்திற்கு பின் போலீசார் உயிருடன் சிறுமியை மீட்டனர்.

மேலும் செய்திகள்