தென்மேற்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் - டெல்லியில் நடந்தது

தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது.

Update: 2019-05-22 21:15 GMT
புதுடெல்லி,

தென்மேற்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது. கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை கமிஷனர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா பேசியதாவது:-

மத்திய அரசு கடந்த ஆண்டு மாநில பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 7 ஆயிரம் கோடியும், மத்திய பேரிடர் நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரம் கோடியும் என ரூ.17 ஆயிரம் கோடி புயல், வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கி உள்ளது. மத்திய, மாநில பேரிடர் மீட்பு குழுவை தேவைப்படும்பட்சத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கூடுதலாக வழங்கி உதவும்.

தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மாநில அரசுகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை மற்றும் கூட்டு நடவடிக்கையால் பெரும் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது. எனவே மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கூடுதல் விழிப்புணர்வுடன் எதிர்காலத்தில் செயல்பட வேண்டும்.

இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஜெனரல் ரமேஷ் பேசுகையில், பேரிடர் விழிப்புணர்வை குறைப்பதில் இந்தியா புதிய தரநிலையை அடைந்துள்ளது என்றார்.

மேலும் செய்திகள்