சூரத் தீ விபத்து; உயிரிழந்த 20 பேரில் 3 மாணவிகள் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி

குஜராத்தின் சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 20 பேரில் 3 மாணவிகள் 12ம் வகுப்பு தேர்வில் இன்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2019-05-25 10:58 GMT
சூரத்,

குஜராத்தின் சூரத் நகரில் சர்தனா பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இந்த தீ விபத்தில் 20 மாணவ மாணவியர் உயிரிழந்தனர்.  இவர்களில் 3 பேர் இன்று வெளியான 12ம் வகுப்பு தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

12ம் வகுப்பு குஜராத் வாரிய தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.  இதில், தீ விபத்தில் உயிரிழந்த யாஷ்வி கேவாடியா, மான்சி வர்ஷினி மற்றும் ஹஸ்தி சுரானி ஆகிய 3 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இவர்களில் யாஷ்வி 67.75 சதவீதமும், மான்சி 52.03 சதவீதமும் மற்றும் ஹஸ்தி 69.39 சதவீதமும் பெற்றுள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் மிக குறைந்த வயது கொண்டவர் இஷா ககாடியா (வயது 15).  இதேபோன்று கிரீஷ்மா கஜேரா (வயது 22) மிக அதிக வயதுடையவர் ஆவார்.  உயிரிழந்த அனைவரும் 17 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று குஜராத் அரசு அறிவித்தது.  தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டார்.  தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களில் தீ பற்றிய பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், பயிற்சி மையம் நடத்திய பார்கவ் பூடானி என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.  மற்ற 2 பேர் தப்பியோடி உள்ளனர்.  அவர்களை தேடும் பணி தொடருகிறது.

மேலும் செய்திகள்