மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட சிங்கின் உடலை சுமந்து சென்ற ஸ்மிரிதி இரானி

மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட சிங்கின் உடலை ஸ்மிரிதி இரானி சுமந்து சென்றார்.

Update: 2019-05-26 11:30 GMT
அமேதி,

உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் நடந்து முடிந்த பொது தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார்.  முன்னாள் மத்திய மந்திரியான இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தோல்வியுற்றார்.

தேர்தல் பிரசாரத்தில், இங்குள்ள பரவுலியா கிராம மக்களிடம் காலணிகள் வழங்கப்பட்டன.  இவற்றை வழங்கி ராகுல் காந்தியை அவமதிப்பு செய்து விட்டார் இரானி என்று காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி வெளிப்படையாக குற்றச்சாட்டு எழுப்பினார்.

இந்த காலணிகளை வழங்கிய பணியில் முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவரான சுரேந்திரா சிங் (வயது 50) என்பவர் ஈடுபட்டார்.  இரானிக்கு ஆதரவாக செயல்பட்ட இவரை, நேற்றிரவு 11.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.  எனினும் இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்து விட்டார்.  இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிங்கின் இறுதி சடங்கு அவரது ஊரில் நடந்தது.  இதில் கலந்து கொண்ட இரானி சிங்கின் உடலை தனது தோளில் சுமந்தபடி சென்றார்.

மேலும் செய்திகள்