வங்காள தேசத்தில் நடந்த குண்டு வெடிப்பில் போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் காயம் - ஐ.எஸ். பயங்கரவாதிகள் அட்டூழியம்

ஐ.எஸ். பயங்கரவாதிகளால் வங்காள தேசத்தில் நடந்த குண்டு வெடிப்பில் போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

Update: 2019-05-27 21:45 GMT
டாக்கா,

வங்காள தேசத்தில் போலீஸ் வேனில் நடந்த குண்டு வெடிப்பில் போலீ்ஸ் அதிகாரி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இதற்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

வங்காள தேச தலைநகர் டாக்காவில் மலிபாக் பகுதியில், போலீஸ் வேன் ஒன்றில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

இதில், உதவி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் டாக்கா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இத்தகவலை அமெரிக்காவை சேர்ந்த உளவு குழுமம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 3 பேரையும் டாக்கா நகர போலீ்ஸ் கமிஷனர் அசாதுசமான் மியா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

போலீஸ் வேன் மீது குண்டு வீசப்படவில்லை. வேனில் ஏற்கனவே குண்டு வைத்துவிட்டு, அதை வெடிக்க செய்துள்ளனர். வழக்கமாக பயன்படுத்தப்படும் குண்டை விட சக்திவாய்ந்ததாக உள்ளது. குற்றவாளிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

போலீசாரை கொல்வதை விட நாட்டில் அச்சத்தை ஏற்படுத்துவதையே நோக்கமாக கொண்டு குண்டு வைத்துள்ளனர். போலீசாரின் மனஉறுதியை சீர்குலைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம், டாக்காவில் உள்ள ஒரு ஓட்டலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 22 பேர் பலியானார்கள். அப்போதிருந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சுமார் 100 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும் பலரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்