ஒடிசா முதல் மந்திரியாக நவீன் பட்நாயக் பதவியேற்பு

ஒடிசா முதல் மந்திரியாக 5-வது முறையாக நவீன் பட்நாயக் பதவியேற்றுக் கொண்டார்.

Update: 2019-05-29 05:36 GMT
புவனேசுவர், 

ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. மொத்தம் உள்ள 21 நாடாளுமன்ற தொகுதிகளில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான ஆளும் பிஜூ ஜனதாதளம், சட்டசபை தேர்தலில் 146 தொகுதிகளில் 112 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது. ஒடிசா சட்டசபை தேர்தலில் பிஜூ ஜனதாதளம் தொடர்ந்து 5-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தது. 

இதையடுத்து, சட்டசபை பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவராக நவீன் பட்நாயக், எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்பட்டார்.  பின்னர், நவீன் பட்நாயக் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் கணேஷி லாலை சந்தித்து, ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறு உரிமை கோரியதுடன், தன்னை ஆதரிக்கும் 112 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலையும் வழங்கினார்.

அதை ஏற்றுக்கொண்ட கவர்னர், புதிய அரசு அமைக்குமாறு நவீன் பட்நாயக்குக்கு அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து, ஒடிசா முதல்-மந்திரியாக நவீன் பட்நாயக் தொடர்ந்து 5-வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். புவனேஸ்வரில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கவர்னர் கணேஷி லால் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

மேலும் செய்திகள்