கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கானது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.

Update: 2019-05-30 11:43 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான ப. சிதம்பரம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது ஆட்சிக்காலத்தில் (2007ம் ஆண்டு) மத்திய நிதி மந்திரியாக பதவி வகித்தார்.

அவர் பதவியில் இருந்தபொழுது, மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடு ரூ.305 கோடி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ரூ.10 லட்சம் பெற்றதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.  பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பாக ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் நிதி மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கார்த்தி சிதம்பரம் மீதான ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில், அவர் சிவகங்கை மக்களவை தொகுதியின் எம்.பி.யாக தேர்வானார்.  இதனால் இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்