ஆன்லைனில் மோசடியில் சிக்கி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம் லோதாவிடம் ரூ.1 லட்சம் மோசடியாக பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-06-03 06:22 GMT
புதுடெல்லி,

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆர்.எம்.லோதா. இவரது நண்பர் பி.பி.சிங். இவரும் முன்னாள் நீதிபதி. இருவரும் இமெயிலில் அவ்வப்போது தகவல் பரிமாறிக்கொள்வது வழக்கம். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி, நீதிபதி சிங்கிடம் இருந்து அவருக்கு மெயில் வந்தது. அதில், தனது உறவினரின் அறுவை கிச்சைக்காக அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்றும் கீழ்கண்ட வங்கி கணக்குக்கு உடனடியாக பணம் அனுப்புமாறும் கோரப்பட்டிருந்தது.

உடனடியாக நீதிபதி சிங்கை, போனில் தொடர்பு கொண்டார் ஆர்.எம்.லோதா. லைன் கிடைக்கவில்லை. பின்னர் அதை உண்மை என்று நம்பிய அவர், குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு இரு தவணைகளாக தலா 50 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில், பி.பி.சிங்கை சந்தித்தார் ஆர்.எம்.லோதா. அப்போது, தனது இமெயில் ஹேக் செய்யப்பட்டு விட்டதை தெரிவித்த சிங், தான் பணம் கேட்டதாக தனது உறவினர்களுக்கு மெயில் சென்றதாகவும் தெரிவித்தார். அப்போது ஆர்.எம்.லோதா, தானும் பணம் அனுப்பியதாக சொல்ல, பிறகுதான் உண்மை தெரிய வந்தது.

பி.பி.சிங்கின் இ-மெயில் முகவரியை ஹேக் செய்த ஆன்-லைன் மோசடியாளர்கள், ஆர்.எம்.லோதாவை தொடர்பு கொண்டு பணம் பறித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த ஆர்.எம்.லோதா, இதுபற்றி தெற்கு டெல்லியில் உள்ள மாளவியா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை  நீதிபதியிடமே மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்