நிபா வைரஸ்: பயப்பட தேவையில்லை, அனைத்து உதவிகளையும் அளிக்கும்- மத்திய அரசு

நிபா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2019-06-04 06:55 GMT
புதுடெல்லி,

கேரளாவில் ‘நிபா‘ வைரஸ் காய்ச்சல் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு பரவியதில் 17 பேர் உயிரிழந்தனர். நிபா வைரஸ் நோய் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுகிறது. எனவே அணில், வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது. பலாப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம் போன்றவற்றை சுத்தமாக கழுவியபிறகுதான் சாப்பிட வேண்டும். வவ்வாலின் கழிவுகளில் இருந்துதான் நிபா வைரஸ் பரவுகிறது என தெரிவிக்கப்பட்டது. அப்போது சுகாதாரத்துறை மேற்கொண்ட தீவிர தடுப்பு நடவடிக்கையால் வைரஸ் காய்ச்சல் கடந்த ஆண்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில்,  கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  எர்ணாகுளம் மாவட்டத்தில் வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் 23 வயது இளைஞர் ஒருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள   தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் வெளியான முடிவுகளின் படி, அவருக்கு நிபா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவ தொடங்கியதை தொடர்ந்து மத்திய அரசு இன்று  அவசர ஆலோசனை நடத்தியது.  டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஹர்ஷ்வர்தன் கூறுகையில், “ மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிப்போம் என்று கேரள சுகாதாரத்துறை மந்திரியிடம் நான் உறுதி அளித்தேன். எனவே, அச்சப்பட தேவையில்லை. கேரளாவுக்கு 6 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்