விவசாயிகள் தற்கொலை விவகாரம்: கேரள சட்டசபையில் அமளி - எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு

விவசாயிகள் தற்கொலை விவகாரம் தொடர்பாக, கேரள சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இதனால் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2019-06-10 20:45 GMT
திருவனந்தபுரம்,

கேரள சட்டசபை கூட்டம் நேற்று காலை நடந்தது. அப்போது காங்கிரஸ் உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதலா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களை போன்று கேரளாவிலும் ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், கடந்த 1½ ஆண்டுகளில் 18 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்றும் கூறினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த விவசாயத்துறை மந்திரி சுனில்குமார், மொத்தம் 15 விவசாயிகள்தான் தற்கொலை செய்துள்ளனர் என்றார். இதனால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது.

அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினர் பாலகிருஷ்ணன், விவசாயிகள் தற்கொலை, விவசாய கடன் தள்ளுபடி குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். ஆனால் அதை ஏற்க சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மறுத்துவிட்டார். இதனால் காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும் செய்திகள்