உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் மோதல் “நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு”

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய அணி இன்று பாகிஸ்தானுடன் கோதாவில் இறங்குகிறது.

Update: 2019-06-16 07:32 GMT
புதுடெல்லி,

இங்கிலாந்தில் நடந்து வரும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த உலக கோப்பையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், பேராவலையும் உருவாக்கி இருக்கும் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டு மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறுகிறது.

கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் மோதல் என்றாலே அனல் பறக்கும். அதுவும் இது உலக கோப்பை என்பதால் சொல்லவே வேண்டாம். உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த ஆட்டத்தை காண தவம் கிடக்கிறார்கள். தங்களுக்கு இது சாதாரண ஆட்டம் என்று வீரர்கள் வெளிப்படையாக சொன்னாலும், தனித்துவம் வாய்ந்த ஒரு போட்டி என்பதை அவர்களது மனம் அறியும். 

இரு நாட்டு பகைமை காரணமாக ரசிகர்களும் இந்த போட்டியை ஒரு யுத்தம் போன்று உணர்வுபூர்வமாக பாவிப்பதால், அனைவரது கவனமும் இந்த ஆட்டத்தின் மீது பதிந்து இருக்கிறது. இந்தப்போட்டியில், இந்திய அணி வெற்றிபெறுவதற்காக, உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில், கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு ஆரத்தி வழிபாடு நடத்தினர். 

இதே போன்று நாடு முழுவதும் 100 இடங்களுக்கு மேல் இந்திய அணியின் வெற்றிக்காக கூட்டுப்பிரார்த்தனையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் தஞ்சாவூர், ஈரோடு, கோவை, வேலூர், காஞ்சிபுரம், திருச்சி ஆகிய 6 இடங்களில்  6 அடி உயரத்திற்கு அகண்ட அகர்பத்தியை ஏற்றி இந்திய அணியின் வெற்றிக்காக ஏற்கனவே வழிபாடு நடத்தியது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்