வலிமையான எதிர்க்கட்சி இருப்பது ஜனநாயகத்திற்கு அவசியம் -பிரதமர் மோடி

வலிமையான எதிர்க்கட்சி இருப்பது ஜனநாயகத்திற்கு அவசியம். நாடாளுமன்றம் சுமுகமாக நடக்க ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Update: 2019-06-17 05:27 GMT
புதுடெல்லி, 

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அபார வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30-ந் தேதி பதவி ஏற்றது.

அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் 31-ந் தேதி கூடிய மத்திய மந்திரிசபையின் முதல் கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17-ந் தேதி கூட்ட முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி இன்று 17-வது நாடாளுமன்ற மக்களவை முதல் முறையாக கூடுகிறது. இன்றும், நாளையும் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பாரதீய ஜனதா கட்சி மூத்த எம்.பி. வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

நாடாளுமன்ற  கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடி  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்றம் சுமுகமாக நடக்க ஒத்துழைக்க வேண்டும்.  அதிக எண்ணிக்கையில் பெண் எம்பிக்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். புதிய நண்பர்களுடன்,  புதிய கனவுகளுடன்  இன்றைய நாடாளுமன்ற கூட்டம் தொடங்குகிறது.  மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக பணியாற்றுகிறோம். மக்கள் மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர்.

வலிமையான எதிர்க்கட்சி இருப்பது ஜனநாயகத்திற்கு அவசியம். எதிர்க்கட்சிகளின் தேவையையும், மதிப்பையும் அறிந்துள்ளோம். மக்களுக்கு ஆதரவான முடிவுகளை ஆதரிக்க அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சியின் பங்கு முக்கியமானது. எதிர்க்கட்சிகள் அவர்களின் எண்ணிக்கையைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.  அவர்கள் சுறுசுறுப்பாகப் பேசுவார்கள், நாடாளுமன்ற  நடவடிக்கைகளில் பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன். "மக்களவையில் எதிர்க்கட்சிகள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்" என கூறினார்.

மேலும் செய்திகள்