ஆண்டுக்கு 10 லட்சம் பேர் மரணம்; பீடிக்கு உச்சபட்ச வரி விதிக்க நிபுணர்கள் கோரிக்கை

ஆண்டுக்கு 10 லட்சம் பேர் மரணம் அடைய வழிவகுக்கும் பீடிக்கு உச்சபட்ச வரி விதிக்க நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-06-19 15:21 GMT
புதுடெல்லி,

நாட்டில் 26.8 கோடி பேர் புகையிலை பயன்படுத்துபவர்களாக உள்ளனர்.  இதனால் மத்திய அரசு சிகரெட்டுகள் மற்றும் புகையில்லா புகையிலை ஆகியவற்றுக்கு 28 சதவீதம் என்ற உச்சபட்ச ஜி.எஸ்.டி. வரியை விதித்தது.  இதற்கு மருத்துவர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் போன்றோருடன் பொதுநல அமைப்புகளும் வரவேற்பு அளித்துள்ளன.

இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் புகை பிடிக்க தொடங்குவதில் இருந்தும் மற்றும் வாழ்நாள் அடிமையாக இருப்பதில் இருந்தும் அவர்களை அரசு தடுத்துள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் பேர் மரணம் அடைவதற்கு பீடி முக்கிய பங்கு வகிக்கிறது.  சிகரெட்டுகளை போன்று தீங்கு விளைவிக்க கூடிய பீடிக்கும் உச்சபட்ச வரியை விதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.  புகையிலைக்கான வரிகள் அவற்றின் பயன்படுத்துதலை குறைக்க வழிவகுக்கும்.  அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும்.

புகையிலை பயன்படுத்துதல் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய வியாதிகள் ஆகியவற்றால் நாட்டில் பொருளாதார சுமை ஏற்படுவதற்கும் பீடிக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என அவர்கள் கூறுகின்றனர்.

நாடுகள் குறைந்தது 75 சதவீதம் அல்லது அதற்கும் மேல் கூடுதலாக இதுபோன்ற புகையிலை பொருட்கள் மீது உற்பத்தி வரி விதிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.  ஆனால் தெற்காசியாவில் உள்ள மற்ற நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளை விட இந்தியாவில் அனைத்து புகையிலை பொருட்கள் மீதும் விதிக்கப்படும் மொத்த வரி விகிதம் மிக குறைவாக உள்ளது.

இதனால் உண்மையில், சிகரெட்டுகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எளிதில் கிடைக்க கூடிய ஒன்றாகவே உள்ளன என பொருளாதார நிபுணர் ரிஜோ ஜான் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்