உலகுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா : பிரதமர் மோடி

யோகாவின் பயன்களை உலக நாடுகள் அனுபவித்து வருகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Update: 2019-06-21 01:44 GMT
ராஞ்சி,

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இதய ஆரோக்கியத்துக்காக யோகாசனம் என்ற கருத்தாக்கத்தை மையமாக கொண்டு யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா பள்ளி மைதானத்தில், சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.   இந்த நிகழ்ச்சியில் 40,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-  உலகம் முழுவதும் மக்கள் யோகா தினத்தை கொண்டாடி வருகின்றனர்.  நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக யோகா எப்போதுமே இடம் பிடித்து வருகிறது.  யோகாவின் பயன்களை அனைவரும் ஒன்றிணைந்து பரப்ப வேண்டும். யோகா செய்வதன் மூலம் அமைதி கிடைக்கிறது.  

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு யோகா அவசியம் யோகா ஆயுள் முழுவதும் கைகொடுக்கும்.  நம் அன்றாட வாழ்வின் அங்கமாக யோகா மாறி வருகிறது. யோகா அனைவருக்குமானது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இதயம் தொடர்பான நோய்களை யோகா தடுக்கும்.  உலகுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா. ஏழை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாற்ற விரும்புகிறோம்” இவ்வாறு அவர் கூறினார். 

இதைத்தொடர்ந்து, பல்வேறு யோகாசனங்களையும் பிரதமர் மோடி செய்தார். இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய மைதானத்தில் 28 இடங்களில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன. மாநில ஆளுநர் திரெளபதி முர்மு, மாநில முதல்வர் ரகுவர் தாஸ், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக், மாநில சுகாதார துறை அமைச்சர் ராமசந்திர சந்திரவன்ஷி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்