எமெர்ஜென்சியை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி- அமித்ஷா

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1975-ம் ஆண்டு கொண்டு வந்த அவசர நிலையை எதிர்த்துப் போராடிய அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவிப்பதாக மோடியும், அமித்ஷாவும் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-06-25 06:31 GMT
புதுடெல்லி

கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி நாட்டில் அவசரநிலை கொண்டுவரப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் ஆகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி  பரிந்துரையை ஏற்று அப்போது குடியரசுத் தலைவராக இருந்த பக்ருதீன் அலி அகமது நாட்டில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார். 

21 மாதங்கள் அவசர நிலை நடைமுறையில் இருந்தது.1975-ம் ஆண்டு 25-ம் தேதியில் இருந்து 1977-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி நாட்டில் அவசர நிலை நடைமுறையில் இருந்தது. இந்த 21 மாதங்களில் நாட்டில் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்ட. மக்களின் சிவில் உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், அவசர நிலையை எதிர்த்தும் குரல் கொடுத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

பத்திரிகைகள் செய்தி வெளியிடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் நடந்தன. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் எமர்ஜென்சியின் போது சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவரச நிலை நாட்டில் கொண்டுவரப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் ஆகின்றன. அந்த நாளை நினைவுபடுத்தி பிரதமர் மோடி ட்விட்டரில் காங்கிரஸ் கட்சியை கடுமையாகச் சாடியுள்ளார். 

இது தொடர்பாக அவரின் ட்வீட்டில், நாட்டில் அவசர நிலையை தீவிரமாகவும், அச்சமின்றியும் எதிர்த்த மிகப்பெரியவர்களை இந்தியா வணங்குகிறது. எதேச்சதிகார மனநிலை படைத்தவர்களிடம் இருந்து விடுபட்டு, இந்திய ஜனநாயகம் வெற்றிகரமாக செயல்படுகிறது என மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா ட்விட்டரில் கூறுகையில், 1975-ம் ஆண்டில் இதே நாள், ஒரு சிலரின் அரசியல் நலனுக்காக, நாட்டின் ஜனநாயகம் கொல்லப்பட்டது. மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன, நாளேடுகளுக்கு தணிக்கை முறை வந்தது. நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு லட்சக்கணக்கானோர் போராடினார்கள். பல்வேறு சித்திரவதைகளை அனுபவித்தார்கள். போராடிய அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்