இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை செல்கிறார்கள் - மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி தகவல்

இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை செல்கிறார்கள். இதில் 48 சதவீதம் பேர் பெண்கள் என மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி தகவல் தெரிவித்தார்.

Update: 2019-06-25 21:45 GMT
புதுடெல்லி,

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் கூறியதாவது:-

சுதந்திரம் பெற்றதில் இருந்து முதல் முறையாக இந்தியாவில் இருந்து 2 லட்சம் முஸ்லிம்கள் எந்த மானியமும் இல்லாமல் ஹஜ் யாத்திரை மேற்கொள்கிறார்கள். இதில் 48 சதவீதம் பேர் பெண்கள். 1.40 லட்சம் பேர் இந்திய ஹஜ் கமிட்டி மூலமும், 60 ஆயிரம் பேர் ஹஜ் பயணக்குழுக்கள் மூலமும் செல்கிறார்கள். 2,340 பெண்கள் ஆண் துணை இல்லாமல் செல்கிறார்கள். குலுக்கல் முறையில்லாமல் இவர்களை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 1,180 ஆக இருந்தது. ஆந்திரா, உத்தரபிரதேசம், மேற்குவங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் விண்ணப்பித்த அனைவரும் ஹஜ் யாத்திரை செல்கிறார்கள். ஹஜ் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதால் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர்கள் அனைவருக்கும் அனுமதி கிடைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 21 விமான நிலையங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விமானங்களில் இவர்கள் பயணம் செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்