‘மத்திய பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்’ - பிரதமர் மோடி பெருமிதம்

மத்திய பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

Update: 2019-07-06 23:45 GMT
வாரணாசி,

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பிரதமர் மோடி 2-வது முறையாக தனது வாரணாசி தொகுதிக்கு நேற்று சென்றார். ஒருநாள் சுற்றுப்பயணமாக சென்ற அவர், அங்கு நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதில் முக்கியமாக பா.ஜனதா கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை வாரணாசியில் தொடங்கிவைத்தார்.பா.ஜனதாவின் நிறுவனரான சியாம பிரசாத் முகர்ஜியின் 118-வது பிறந்த தினத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது கூறியதாவது:-

பா.ஜனதாவுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வரும் ஒவ்வொரு தொண்டருக்கும் இந்த காசி மண்ணில் இருந்து வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று (நேற்று) பா.ஜனதாவின் உறுப்பினர் சேர்க்கையை காசியில் தொடங்கி வைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.

உறுப்பினர் சேர்க்கையால் பா.ஜனதாவின் பலம் மேலும் அதிகரிக்கும். மேலும் சமூகத்தின் அனைத்து தரப்பினருடன் பா.ஜனதாவின் இணைப்பையும் பலப்படுத்தும்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (நேற்று முன்தினம்) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் இல்லை. ஆனால் அது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். குறிப்பாக தனிநபர் வருமானம் அதிகரிப்பு, நுகர்வு அதிகரித்தல் மற்றும் உற்பத்தி பெருக்கத்தின் மூலம் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலரை (1 டிரில்லியன் என்பது 1 லட்சம் கோடி ஆகும்) எட்டுவதற்கான வழியை காட்டி உள்ளது.

தனிநபர் வருமானத்தை அதிகரித்ததன் மூலம் சர்வதேச அளவில் வளரும் நாடு என்ற நிலையில் இருந்து வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை எட்டிய நாடுகள் பல உள்ளன. அதைப்போல இந்தியாவும் வளர்ச்சியை எட்ட முடியும். இந்த இலக்கு கடினமானதல்ல.

தனிநபர் வருமானம் அதிகரிக்கும் போது, மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். இதன் மூலம் தேவை அதிகரித்து உற்பத்தியை பெருக்குவதற்கான வழிகள் பிறக்கும். இவற்றின் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். தனிநபர் வருமானம் உயர்வால் சேமிப்பும் அதிகரிக்கும்.

5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி குறித்து தெரிந்து வைத்திருப்பது அவசியம். ஏனெனில் இந்த விவகாரத்தில் இந்தியர்களின் தகுதியை சிலர் சந்தேகிக்கிறார்கள். இந்த இலக்கை எட்டுவது மிகவும் கடினம் என்று கூறுகிறார்கள்.

இவர்கள் அனைவரும் தொழில்முறை அவநம்பிக்கைவாதிகள். இவர்களிடம் வெறும் விமர்சனங்களே இருக்கும். மாறாக ஒரு இலக்கை அடைவதற்கான தீர்வுகள் இருக்காது. சாதாரண மக்களிடம் இருந்து இவர்கள் பிரிந்தே இருக்கின்றனர். இவர்களிடம் ஒரு தீர்வுக்காக நீங்கள் சென்றால், அது உங்களை அழிவில் தள்ளிவிடும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா செயல் தலைவர் ஜே.பி.நட்டா, மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ள 3டி அருங்காட்சியகம் ஒன்றையும் பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

முன்னதாக வாரணாசி விமான நிலையத்தில் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் சிலை ஒன்றை மோடி திறந்து வைத்தார். இதில் சாஸ்திரியின் மகன்கள் அனில் சாஸ்திரி, சுனில் சாஸ்திரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதைப்போல தோட்டம் அமைக்கும் நிகழ்ச்சி ஒன்றையும் வாரணாசியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பஞ்ச்கோஷி என்ற இடத்தில் ஆயிரக்கணக்கான பள்ளி குழந்தைகளின் மத்தியில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடி அரச மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தார்.

மேலும் செய்திகள்