ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு: சுப்பிரமணிய சாமி மீது வழக்கு பதிவு சத்தீஷ்கார் போலீசார் நடவடிக்கை

சுப்பிரமணிய சாமி மீது வழக்கு பதிவு சத்தீஷ்கார் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2019-07-07 18:30 GMT
ராய்ப்பூர்,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போதைப்பொருள் (கோகைன்) பயன்படுத்துகிறார் என பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணிய சாமி சமீபத்தில் கூறியிருந்தார். இது காங்கிரசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து சத்தீஷ்காரின் ஜஸ்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பவன் அகர்வால், பதல்கான் போலீஸ் நிலையத்தில் சுப்பிரமணிய சாமி மீது புகார் அளித்தார். அதன்படி சுப்பிரமணிய சாமி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பவன் அகர்வால் தனது மனுவில், ராகுலுக்கு எதிராக சுப்பிரமணியசாமி கூறிய கருத்து பொய்யானது என அவருக்கு தெரிந்திருந்தும், ராகுல் காந்தியை அவமதிக்கும் நோக்கத்தில்தான் இந்த கருத்தை வெளியிட்டு இருப்பதாக கூறியிருந்தார். மேலும் தனது கருத்து மூலம் அரசியல் கட்சிகள் இடையே பகையும், மக்கள் மத்தியில் பரபரப்பும் ஏற்படும் என்பதும் சுப்பிரமணிய சாமிக்கு தெரியும் எனவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

இதைப்போல காங்கிரசின் பல்வேறு பிரிவுகள் சார்பிலும் சுப்பிரமணிய சாமிக்கு எதிராக போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்