கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள உச்சகட்ட அரசியல் குழப்பம்: சினிமாவை மிஞ்சிய ருசிகர காட்சிகள்

கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள உச்சகட்ட அரசியல் குழப்பத்தின் விறுவிறுப்பை அதிகப்படுத்திய ஒரு சம்பவம், பெங்களூருவில் சினிமா காட்சிகளை போல அரங்கேறியது குறித்து சுவையான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2019-07-09 07:55 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தின் முல்பாகல் சட்டப்பேரவை தொகுதியில், சுயேட்சையாக தேர்வு செய்யப்பட்டவர் நாகேஷ். அவர் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றியவர் கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும், அமைச்சருமான சிவக்குமார்.

ஒரு மாதத்திற்கு முன்னர் அரசுக்கு ஆதரவளித்து அமைச்சர் பதவியை பெற்றார் சுயேட்சை எம்எல்ஏ நாகேஷ். சீடனைப் போல சிவக்குமாரின் வழிகாட்டுதலில் இருந்த நாகேஷ், அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்வது என்ற முடிவால் எரிச்சலடைந்துள்ளார்.

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கையோடு ஆளுநரையும் சந்தித்து அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றதோடு, பாஜகவுக்கும் ஆதரவுக் கடிதம் அளித்தார். திரைக்கதையில் இந்த திருப்பத்தை எதிர்பாராத சிவக்குமார், பதறிப்போய் நாகேஷை சமாதானப்படுத்த விரைந்துள்ளார்.

ஆனால் அதற்குள் நாகேஷ் மும்பைக்கு விமானம் ஏற, விமான நிலையத்திற்கு காரில் பறந்துவிட்டார்.  சிவக்குமாரும் காரை எடுத்துக் கொண்டு பின்னால் விரைந்துள்ளார்.

ஆனால், அவர் விமான நிலையம் போய்ச் சேர்வதற்குள், நாகேஷ் மும்பைக்கு விமானத்தில் பறந்து விட்டார். எத்தனையோ முறை ஆபத்பாந்தவனாக செயல்பட்டு முன்னர் காங்கிரஸ் ஆட்சியையும், தற்போது காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள அரசையும் காப்பாற்றியவர், சிவக்குமார்.

இந்த முறையும் ஆபரேசன் தாமரையிலிருந்து கூட்டணி அரசைக் காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்து வருகிறார்.

ஆனால் தனது சொந்த சீடரான சுயேட்சை எம்எல்ஏ நாகேஷை, அவர் கோட்டைவிட்டு விட்டதுதான் தற்போது கர்நாடக அரசியலில் விவாதப்பொருளாகியுள்ளது.

அதனால்தான் என்னவோ, நாகேஷை பாஜக வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று விட்டதாக சமாளித்து வருகிறார் சிவக்குமார்.

தற்போது மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார். அவர் பெங்களூரு சாந்தி நகர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ரோஷன்பெய்க். இவருடன் சேர்த்து மொத்தம் 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

மும்பையில் ரகசிய இடத்தில் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் சிறை  வைக்கப்பட்டு உள்ளதாகவும், மனம் மாறிவிடாமல் இருக்க மறைத்து வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்