எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகளை கவிழ்க்க பா.ஜனதா சதி மாயாவதி ஆவேசம்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை கவிழ்க்க பா.ஜனதா சதி செய்து வருவதாக மாயாவதி குற்றம் சாட்டினார்.

Update: 2019-07-11 19:51 GMT
லக்னோ,

கர்நாடகாவில், காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். கோவா மாநிலத்தில், 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ஆளும் பா.ஜனதாவில் இணைந்துள்ளனர். இதுதொடர்பாக பா.ஜனதா மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பணபலத்தை பயன்படுத்தியும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்தும் மத்தியில் ஆட்சியை பிடித்தது, பா.ஜனதா. தற்போது, பா.ஜனதா அல்லாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை கவிழ்க்கும் சதித்திட்டத்தை நிறைவேற்றி வருகிறது.

இந்த மாநிலங்களில், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா தோல்வி அடைந்தது. அதனால் ஏற்பட்ட விரக்தியால் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கர்நாடகாவிலும், கோவாவிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயன்று வருகிறது. இது, ஜனநாயகம் மீது விழுந்த கறை. இதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்சி தாவும் எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிப்பதற்கு கடுமையான சட்டம் கொண்டு வர இதுவே நல்ல தருணம் ஆகும். இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்