பஞ்சாப் மாநில அமைச்சர் பதவி விலகல் கடிதம்; டுவிட்டரில் வெளியிட்டார் சித்து

பஞ்சாப் மாநில அமைச்சர் பதவி விலகல் கடித நகலை நவ்ஜோத் சிங் சித்து டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.

Update: 2019-07-14 07:45 GMT
சண்டிகார்,

பஞ்சாப் மாநில சுற்றுலா மற்றும் கலாசார விவகார துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர் நவ்ஜோத் சிங் சித்து.  முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றபொழுது அதற்காக நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.  அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியில் இருந்தும் எதிர்ப்பு குரல் வலுத்தது.  ஆனால், சித்து தனது தரப்பு நியாயத்தினை விளக்கினார்.  முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற முறையில் எனக்கு முறைப்படி அழைப்பு விடப்பட்டது.  அதனை மதித்தே பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டேன்.

அந்த நிகழ்ச்சியில் சீக்கியர்களுக்கு நன்மை செய்யும் வகையிலான கர்டார்பூர் வழித்தடத்தினை திறந்து விடுவது பற்றி தன்னிடம் அந்நாட்டு உயரதிகாரி நம்பிக்கையுடன் பேசினார் என்றும் சித்து கூறினார்.  எனினும், முன்னாள் ராணுவ அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்ட மாநில முதல் மந்திரி அமரீந்தர் சிங்கும் சித்துவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து பேசினார்.

இதனால் சித்துவுக்கு அதிருப்தி ஏற்பட்டது.  இந்நிலையில், பஞ்சாப் மாநில அமைச்சர் பதவி விலகல் கடித நகலை டுவிட்டரில் சித்து வெளியிட்டு உள்ளார்.  அதில், கடந்த ஜூன் 10 என தேதியிடப்பட்ட எனது கடிதம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திஜிக்கு அனுப்பப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்