பீகாரில் வெள்ளத்திற்கு 25 பேர் பலி; 25 லட்சம் பேர் பாதிப்பு: முதல் மந்திரி அறிவிப்பு

பீகாரில் வெள்ளத்திற்கு 25 பேர் பலியாகி உள்ளனர் என முதல் மந்திரி நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.

Update: 2019-07-16 09:57 GMT
பீகாரில் பருவமழை தொடங்கியபின் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.  இதுபற்றி சட்டசபையில் பேசிய முதல் மந்திரி நிதீஷ் குமார், பீகாரில் வெள்ளத்திற்கு 25 பேர் பலியாகி உள்ளனர்.  25.71 லட்சம் பேர் பாதிப்படைந்து உள்ளனர்.

நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை அதிவிரைவாக மேற்கொள்ள உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன்.  இதற்காக 125 இயந்திர படகுகளும், தேசிய பேரிடர் பொறுப்பு படை மற்றும் மாநில பேரிடர் பொறுப்பு படைகளின் 26 கம்பெனி படைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.  அவர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 1.25 லட்சம் பேரை மீட்க உதவியுள்ளனர் என கூறியுள்ளார்.

இதுவரை 199 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு 1.16 லட்சம் பேர் வரை தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  மொத்தம் 676 சமூக சமையலறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.  தேவைப்பட்டால் கூடுதல் வசதிகளும் செய்து தரப்படும்.  பேதி போன்ற நீரால் பரவும் வியாதிகளை தடுக்க மருந்து மற்றும் குடிநீர் ஆகியவற்றுக்கான வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன என கூறினார்.

மேலும் செய்திகள்