ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்வதை தடுத்த போலீசாரை தாக்கிய பெண் கைது

டெல்லியில் ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்வதை தடுத்து நிறுத்திய போலீசாரை தாக்கிய பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-07-17 11:09 GMT
டெல்லி மயாபூரி பகுதியில் நேற்று மாலை டிராபிக் போலீசார் வாகனச் சோதனையை மேற்கொண்டனர். ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பயணம் செய்தவர்களை தடுத்தி நிறுத்தி அபராதம் விதித்தனர். மோட்டார் சைக்கிள் ஒன்றை போலீசார் வழிமறித்த போது அதில் பின்னால் அமர்ந்து இருந்த பெண் கடுமையான வாக்குவாதத்தை போலீசாருடன் மேற்கொண்டார். அவர்களை பிடித்து தள்ளினார். மேலும் கையில் இருந்த மொபைல் போனால் அடித்தார். இதனால் அங்கு சிறிதுநேரம் பதற்றம் நேரிட்டது. டிராபிக் அதிகரித்தது. 

மோட்டார் சைக்கிளை ஓட்டிய ஆண் அமைதியாக அனுமதிக்குமாறு கேட்ட நிலையில் பெண் தொடரந்து வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தார். தன்னுடைய உறவினர் இறந்துவிட்டார், அதற்குதான் போகிறேன் எனவும் கத்தி பேசியுள்ளார். இதற்கிடையே அங்கு டிராபிக் அதிகரிக்கவும் போலீசாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்களை செல்வதற்கு அனுமதித்தனர். அப்போது மற்றொரு வாகன ஓட்டியுடன் அப்பெண் கடுமையான வாக்குவாதத்தை தொடர்ந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டிய ஆணையும், சண்டையிட்ட பெண்ணையும் கைது செய்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. இருவரும் போதையில் இருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்