கணவர் நடராஜன் செலுத்திய பிணைத்தொகை: சசிகலாவுக்கு ரூ.25 லட்சம் திரும்ப தரலாம்

கணவர் நடராஜன் செலுத்திய பிணைத்தொகை ரூ.25 லட்சத்தை, சசிகலாவுக்கு திரும்ப தர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-07-19 22:00 GMT
புதுடெல்லி,

சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜன், 1994-ம் ஆண்டு, லண்டனில் இருந்து ‘லெக்சஸ்’ சொகுசு காரை இறக்குமதி செய்ததுடன், ரூ.1 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு, நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து, 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. அதை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் நடராஜன் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நடராஜன் ரூ.25 லட்சம் பிணைத்தொகையை கீழ் கோர்ட்டில் செலுத்தி ஜாமீன் பெற உத்தரவிட்டது. அவரும் அப்படியே ஜாமீன் பெற்றார்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடராஜன் தரப்பில் வக்கீல் ஆனந்த் சத்தியசீலன் ஆஜராகி, அவரது மரணம் குறித்து தெரிவித்து சான்றிதழை அளித்தார். அதைத் தொடர்ந்து நடராஜன் கீழ்கோர்ட்டில் செலுத்திய ஜாமீன் தொகை ரூ.25 லட்சத்தை அவருடைய மனைவி சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் கேட்டால் அவருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

மேலும் செய்திகள்