தேசிய விவசாயிகள் ஆணையம் அமைக்க மாநிலங்களவையில் தீர்மானம் - அனைத்து கட்சி எம்.பி.க்கள் ஆதரவு

மாநிலங்களவையில் தேசிய விவசாயிகள் ஆணையம் அமைக்க வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி. தனிநபர் தீர்மானம் கொண்டுவந்தார். இதற்கு அனைத்து கட்சி எம்.பி.க்களும் ஆதரவு தெரிவித்தனர்.

Update: 2019-07-19 22:45 GMT
புதுடெல்லி,

மாநிலங்களவையில் நேற்று பா.ஜனதா எம்.பி. விஜய்பால்சிங் தோமர், தேசிய விவசாயிகள் ஆணையம் அமைக்க வேண்டும் என்று தனிநபர் தீர்மானம் கொண்டுவந்தார். அதன் மீது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் 55 சதவீதத்துக்கும் அதிகமானோர் விவசாயத்தில் ஈடுபட்டு உள்ளனர். 15 சதவீத மக்கள் விவசாயம் சார்ந்த இதர தொழில்களில் உள்ளனர். எனவே மொத்தமாக 70 சதவீத மக்கள் விவசாயத்தை சார்ந்து உள்ளனர். விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்கும்போது தான் இந்த நாடு செழிப்பாக மாறும்.

விவசாயிகள் நல நிதி திட்டத்தில் வழங்கப்படும் ரூ.6 ஆயிரம் உதவித் தொகையை ரூ.10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். வருடத்திற்கு 3 சாகுபடி செய்யும் திறன் இந்தியாவிடம் இருக்கிறது. ஆனாலும் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்துவருகிறது. விவசாயிகள் தற்கொலையை தடுத்தாலே விவசாயம் மேம்பாடு அடையும். விவசாயிகளின் உயிரை காப்பாற்றுவது ஒரு உயிரை காப்பாற்றுவது மட்டுமல்ல, விவசாயத்தை காப்பாற்றுவதாகும்.

விவசாயிகளுக்கு எளிமையான, குறுகியகால பயிர் செய்யும் முறைகள் பற்றிய நவீன தொழில்நுட்பங்கள், பயிர் காப்பீட்டு திட்டம் ஆகியவைகள் குறித்து கற்பிக்க வேண்டும். உலகளவிலான நவீன தகவல்களை அறிந்துகொள்ள வசதியாக கிராம அளவில் இணையதள இணைப்பு வழங்க வேண்டும்.

அரசின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு குறைவாக பயிர்கள் விற்பதை தடுக்க அரசு உறுதி செய்ய வேண்டும். இதில் விதியை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள், உணவு பூங்காக்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தீர்மானத்தின் மீது பேசிய பல்வேறு கட்சி எம்.பி.க்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்